» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : ஜி20 நாடுகள் கவலை

திங்கள் 10, ஜூன் 2019 12:53:37 PM (IST)

பிற நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று ஜி20 மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் அத்துமீறலால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பெற்றிருந்த விலக்கு சலுகையையும் ரத்து செய்துவிட்டது.

இந்தியாவுக்கு அளித்திருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தையும் வாபஸ் பெற்றுவிட்டது. மேலும், தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுடனும் அமெரிக்கா மோதி வருகிறது. சீனா உற்பத்தி செய்த பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதித்து வருகிறது. அதுபோல், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. மெக்சிகோவுடன் குடியேற்ற பிரச்சினை ஏற்பட்டதால், மெக்சிகோ பொருட்களுக்கு அமெரிக்கா 5 சதவீத வரி விதிக்க தொடங்கியது. சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், இந்த வரியை நீக்கியது.

இந்த சூழ்நிலையில், ஜப்பான் நாட்டின் புகோகா நகரில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி தலைவர்கள் கூட்டம் 2 நாட்களாக நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார். இணையதள நிறுவனங்களான கூகுள், பேஸ்புக் போன்றவற்றுக்கு உலகளாவிய வரி விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 2 நாள் ஆலோசனைக்கு பின்னர், நேற்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: உலக அளவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இன்னும் சரியும் வாய்ப்பே உள்ளது. வர்த்தக ரீதியான பதற்றமும், புவிஅரசியல் சார்ந்த பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தேவைப்பட்டால், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். கருத்தொற்றுமை அடிப்படையிலான தீர்வை எட்ட எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory