» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்

ஞாயிறு 14, அக்டோபர் 2018 10:09:55 PM (IST)

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மென்யூச்சின் தெரிவித்துள்ளார்.

நிகழாண்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுப் பொதுக்கூட்டம், இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள நூஸா டுவா நகரில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றம் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை நிலைகுலையச் செய்யும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மென்யூச்சின், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றம், சர்வதேச பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. சீனாவுடன் சமநிலையிலான வர்த்தகத்தைப் பேண வேண்டும் என்பதே அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் நோக்கமாகும். எங்கள் நோக்கத்தில் நாங்கள் வெற்றியடைந்தால், அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளும் பயன் பெறும்.வர்த்தகப் பதற்றம் குறித்து ஐஎம்எஃப் விடுக்கும் எச்சரிக்கை, பிரச்னையின் தீவிரத்தை சீனா புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றத்தால், நிகழாண்டில் உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம் குறைந்து 3.7 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்தது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Anbu Communications

Joseph Marketing

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes


Thoothukudi Business Directory