» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்தின் மாற்றங்களுக்கு காஷ் ஐடியா உதவும் : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் பேச்சு

திங்கள் 12, பிப்ரவரி 2018 12:13:11 PM (IST)

தமிழகத்தின் மாற்றங்களுக்கு காஷ் ஐடியா உதவும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிசினஸ் பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கினார்.அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மோசமாக இருக்கிறது. 

திட்டங்களை செயல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதனால் நிதி சுமை ஏற்படுகிறது என கூறினார்.  தனது உரையை நாளை நமதே என்று கூறி நிறைவு செய்தார்.  புதிய இணையதளம் ஒன்றையும் நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இணையும் வகையில் பல்வேறு துறைகளும் சேர்க்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், தமிழகத்தின் மாற்றத்திற்கு பேராசிரியர் காஷ் என்கிற கஸ்தூரிரங்கனின் ஐடியாக்கள் உதவும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர், பாஸ்டனில் நடந்த சந்திப்பில் புதிய யோசனைகளை தந்ததற்கு நன்றி.  தமிழகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த தங்களின் யோசனைகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "கிராமத்தில் இருந்து மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதற்காக, நான் அரசியல் பயணம் தொடங்க இருக்கிறேன். இந்த மாற்றத்துக்கு எல்லோருடைய பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மோசமாக இருக்கிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதனால் நிதி சுமை ஏற்படுகிறது.

நான் மக்களிடம் நேரடியாக செல்ல தயாராகி இருக்கிறேன். அரசியல்வாதிகளிடம் பேசுவது எனது நோக்கம் இல்லை. எந்த நிலையிலும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. ஓட்டுக்கு ரூ.15 ஆயிரம் வாங்கினால் 15 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும்போது அவர்களை கேள்வி கேட்க முடியாது. காந்தியும், பெரியாரும் எனது ஹீரோக்கள். அவர்கள் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு நல்லது செய்தார்கள். அப்படி இருக்க வேண்டும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். 

ஆனால் தற்போது நேரடி அரசியலில் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டு விட்டது. நான் வித்தியாசமானவன் என்று கூறவில்லை. ஆனால் அரசியலில் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு பணியாற்றப் போகிறேன். அந்த கிராமங்களை உலக அளவுக்கு சிறந்தவைகளாக உருவாக்கும் திட்டம் என்னிடம் இருக்கிறது. நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் இருவருடையை நோக்கமாக இருக்கிறது.

ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எனது அரசியல் கொள்கையின் நிறம் கறுப்பு. ஆனால் ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது. ரஜினியின் கொள்கை காவியாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அவரது அரசியல் நிறம் காவியாக இருந்தால் அவருடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. எங்கள் கொள்கைகளுக்கு இடையே ஒற்றுமைகள் இருந்தால் அவர் வெளியிடும் தேர்தல் அறிக்கையும் ஒருமித்து இருந்தால் எங்களுடைய இருகட்சிகள் இடையில் கூட்டணி உருவாகலாம். தேவைப்பட்டால் ரஜினியோடு மட்டுமன்றி வேறு கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றுவேன். ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிதான் இருக்கும். பிந்தைய கூட்டணி இருக்காது.

திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்தது அல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதே நேரம் மற்றவர்களையும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்ல மாட்டேன். இதைத்தான் மக்கள் சாப்பிட வேண்டும் என்று அரசு வற்புறுத்தக்கூடாது. எனக்கு வேண்டியதை தேர்வு செய்வது எனது உரிமை. மற்றவர்கள் திணிக்க கூடாது. ஒரு கல்லூரி விழாவில் என்னை அரசியல்வாதி என்று அறிவித்தேன். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என்று கூறிக்கொள்கிறேன். தேர்தலில் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அதை மக்களின் தீர்ப்பாக கருதி ஏற்றுக்கொள்வேன்.

மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்கட்சி வரிசையில் அமர்வேன். அதற்காக வேறு கட்சிகளுடன் கூட்டணிக்காக காத்திருக்க மாட்டேன். பேரம் பேசுவதும் இருக்காது. மக்கள் அடுத்த வாய்ப்பு கொடுப்பதுவரை காத்திருப்பேன். எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2,3,4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். லவ் ஜிகாத் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒரு புதிய புரட்சி வந்து கொண்டு இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் என்னை சந்தித்தார். அப்போது அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசினார். அதனை நானும் மனதில் வைத்து இருக்கிறேன்.

அவர் மட்டுமன்றி வேறு தலைவர்களும் கூட்டணி அமைப்பது பற்றி பேசி இருக்கிறார்கள். எனது அரசியல் கட்சி பெயரை வருகிற 21-ந்தேதி அறிவிக்கிறேன். அதன்பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறேன். இந்த பயணத்தில் மக்களின் தேவைகளை அறிந்து கொள்வேன். நான் தொடங்கும் கட்சிக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஆதரவு அளிப்பார்கள். நல்ல கருத்துகளையும் தருவார்கள். கட்சிக்கான நிதி தேர்தல் நேரத்தில் மக்களிடம் இருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory