» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து செயல்பட வேண்டும் ... ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதன் 15, நவம்பர் 2017 9:01:54 AM (IST)பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது என்று இந்தியா–ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

ஆசியான், கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்பை அவர் 2 முறை சந்தித்து பேசினார். இந்த நிலையில் 12–வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நேற்று நடந்தது. (இதில் ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகியவையும் உறுப்பினர்களாக உள்ளன)

அப்போது மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, சீன பிரதமர் லீ கெகியாங், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோருடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, அவர்கள் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். மோடியை சந்தித்தது பற்றி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இருநாடுகளும் பொருளாதாரம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும் என்று விரும்பினோம்’’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அதில் உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவில் புதிய சக்தியை அளிக்கும் என்று தெரிவித்தார். ஜப்பானிய பிரதமரை சந்தித்தது குறித்து மோடி தனது டுவிட்டர் பதிவில், மணிலாவில் எனது நண்பர் ஷின்ஜோ அபேயை சந்தித்து பேசியது அருமையாக இருந்தது. இரு நாடுகளும் மக்களுக்காக பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பல்வேறு அம்சங்கள் பற்றியும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம் என்றார்.

கிழக்கு ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இந்தியாவின் தூதரக ரீதியான அணுகுமுறையிலும், தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து நாற்கர கூட்டணி ஒன்றை அமைக்கவிருக்கும் நிலையிலும் முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை சந்தித்தபோது, மோடி பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவது பற்றி விரிவாக விவாதித்தார்.

இதேபோல் கிழக்கு ஆசிய மாநாட்டில் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தலைவர்கள் வந்தபோது பிரதமர் மோடி, சீன பிரதமர் லீ கெகியாங், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே, புருனை மன்னர் ஹசனல் போல்கியா, வியட்நாம் பிரதமர் நுயென் ஹூயான் பூக் ஆகியோரை சந்தித்து சிறிது நேரம் உற்சாகமாக பேசினார். இதைத் தொடர்ந்து நடந்த இந்தியா–ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது: ஆசியான் அமைப்பு உருவானபோது உலக நாடுகள் பிளவு பட்டுக் கிடந்தன. இன்று அதன் பொன்விழாவை அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து கொண்டாடுகின்றன. இது உலகில் அமைதியும், சுபிட்சமும் நிலவுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்த பிராந்தியத்தில் அமைதி, அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விதிமுறைகள் அடிப்படையில் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதில் ஆசியான் நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை அளிப்போம். பயங்கரவாதத்தால் இன்று நாம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எனவே பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Johnson's Engineers

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory