» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் இந்தியா, ஸ்பெயின் உட்பட 100 நாடுகள் பெரும் பாதிப்பு

செவ்வாய் 16, மே 2017 11:46:21 AM (IST)ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா உட்பட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. 

சென்னை ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். சிட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் சர்வர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இதன் விளைவாக ஐ.டி. நிறுவனங்களின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தும் இதர நிறுவனங்களும் ரான்சம்வேர் வைரஸôல் பாதிக்கப்பட்டுள்ளன.

கணினிகளையும், தனிநபர்களின் தகவல்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடப்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக சேர்ந்துள்ளது ரான்சம்வேர். ஏற்கெனவே, இருப்பது போல இதுவும் ஒரு கணினி வைரஸ்தான். ஆனால் இதற்கு முன்பு இருந்ததைவிடவும் இவற்றின் ஆபத்துக்கள் அதிகம். அதிலும் இந்த ரான்சம்வேர் தாக்குதல்கள் அதிகமாக நிறுவனங்களைக் குறிவைத்தே நடக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும், இந்தியாவில் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு முடிவு. இந்த ரான்சம்வேர் வைரஸ் வகைகளில் இந்த ஆண்டு மட்டும் 79 வகை வைரஸ்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 58 சதவீத தாக்குதல்கள் மின்னஞ்சல்கள் (இ-மெயில்) மூலமாகவே நடந்திருக்கின்றன.

எங்கிருந்து பரவியது? 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகளை கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

என்ன செய்யும் ரான்சம்வேர் வைரஸ்? இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப எழுத்தாளர் நரசிம்மன் கூறியது: கணினியில் நமக்குத் தேவையான வேலையைச் செய்வதற்காக உருவாக்கப்படுவது சாஃப்ட்வேர். நமக்கு தீங்கு செய்ய உண்டாக்கப்படுவது மால்வேர். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ், ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், ஆர்ற்ள் எனப் பலவகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். பலவிதமான நோக்கங்களுடன் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதில் ஒன்றுதான் ரான்சம்வேர்.

மற்ற வைரஸ்களில் இருந்து ரான்சம்வேர் முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் மற்ற ஹேக்கிங் முறைகளை விடவும், இது மிகவும் சுலபமானதும்கூட. உதாரணத்துக்கு ஒருவருடைய கணினியை ஹேக் செய்து அவருடைய வங்கி விவரங்களை நீங்கள் எடுத்து விடுகிறீர்கள். அதனைப் பயன்படுத்தி, நீங்கள் அந்த வங்கிக்கு சென்று பணம் எடுத்துவிடலாம். இன்டர்நெட் பேங்கிங் தகவல்கள் கிடைத்தால், இணையத்தில் இருந்து கொண்டே பணம் எடுக்கலாம். ஆனால், இந்த முயற்சிகள் ஆபத்து நிறைந்தவை. ஹேக்கர் இவற்றில், கொஞ்சம் பிசகினாலும் எளிதில் காவல் துறையிடம் மாட்டிக் கொள்வார். ஆனால் ரான்சம்வேர் அப்படி அல்ல.

முதலில் உங்களுக்கு ஏதேனும் ஆசையைத் தூண்டும்விதமாக, ஏமாற்றும் விதமாக இ-மெயில் வரும். நீங்கள் அதனை திறந்துவிட்டால் போதும். ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். உங்களது கணினியை நீங்கள் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்துவிட்டு, ஹேக்கர் உங்களைத் தொடர்பு கொள்வார். உங்கள் கணினியை மீண்டும் அன்லாக் செய்யவோ, தகவல்களை திருடாமல் இருக்கவோ, ஒரு தொகையைக் கேட்பார். குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் பணம் தரவில்லையெனில், கேட்கும் தொகையை இரட்டிப்பாக்குவார்.

அலுவலகத்தின் கணினி ரகசியங்களை திருடிவிட்டலோ, உங்களது சொந்தத் தகவல்கள், அந்தரங்கத் தகவல்கள் போன்றவற்றை திருடிவிட்டாலோ, நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவீர்கள். இந்த ரான்சம்வேர் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லட், கணினிகள் என எதனை வேண்டுமானாலும் தாக்க முடியும். வைரஸ் தாக்குதல்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா எப்போதும் "டாப் 10 பட்டியலில் இருக்கிறது. இங்கிருக்கும் பொருளாதார நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை ரான்சம்வேர் தாக்குதல் பட்டியலில் பிரதானமாக இருக்கின்றன என்றார் நரசிம்மன்.

தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

மின்னஞ்சல் மூலம்தான் பெரும்பாலான ரான்சம்வேர் தாக்குதல்கள் நடக்கின்றன. எனவே, உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருந்துதான் மின்னஞ்சல் வந்துள்ளதா எனத் தெரியாமல், மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம். பரிசு விழுந்துள்ளது, வங்கி தகவல்கள் கேட்டு வரும் மெயில்கள் என தேவையற்ற எந்த ஸ்பேம் லிங்க்கையும் திறந்து பார்க்கக்கூடாது. புதிய பென்-டிரைவ்களை பயன்படுத்தும்போது ஸ்கேன் செய்த பின்பே, பயன்படுத்த வேண்டும்.

தேவையற்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்யக் கூடாது. மிக முக்கியமான தகவல்களை "பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. செல்லிடப்பேசிகளில் தேவையில்லாத செயலிகளை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக வலைதள கணக்குகளை பிற இணையதளங்களில் பகிரக்கூடாது. கணினியை ரான்சம்வேர் தாக்கியிருப்பது தெரியவந்தால், முதலில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை துண்டிக்க வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

crescentopticals


New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory