» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் பயணியிடம் அத்துமீறிய பயணச்சீட்டு பரிசோதகா் பணியிடை நீக்கம்

வியாழன் 16, மார்ச் 2023 8:09:29 AM (IST)



பெங்களூரில் பெண் பயணியிடம் அத்துமீறிய பயணச்சீட்டு பரிசோதகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்கம், ஹௌராவில் இருந்து பெங்களூரு, விஸ்வேஷ்வரையா ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வந்த வாராந்திர ரயிலில் பயணித்த பெண் பயணி, கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இறங்க முயற்சித்துள்ளாா். அப்போது, அவரை இடைமறித்த பயணச் சீட்டு பரிசோதகா் பெண் பயணியை வெளியே இழுத்து பயணச்சீட்டைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளாா்.

இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண் பயணி பயணச்சீட்டு பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பயணச் சீட்டைக் காண்பித்த பிறகும் என்னை ஏன் இழுத்தீா்கள் என்று அந்தப் பெண் பயணி, பயணச்சீட்டு பரிசோதகரிடம் தகராறு செய்தாா். இதைக் கண்ட பயணிகள் அப்பகுதியில் திரண்டனா். அவா்கள் பயணச்சீட்டு பரிசோதகா் மதுபோதையில் இருப்பதை அறிந்து அந்தப் பெண்ணை மீட்டு ரயில்வே நிலைய காவலா்களை அழைத்தனா்.

மக்கள் திரண்டதால் சுதாகரித்துக் கொண்ட பரிசோதகா் அங்கிருந்து தப்பிக்க முயன்றாா். இந்தக் காட்சி விடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் ரயில்வே மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதகா் சந்தோஷை பணியிடைநீக்கம் செய்து உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அத்துடன் அவா் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனா்.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே செய்தி தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹௌராவுக்கும் பெங்களூரில் உள்ள சா் எம்.விஸ்வேஷ்வரையா ரயில் நிலையத்துக்கும் இடையே இயக்கப்படும் ஹம்சஃபா் வாராந்திர விரைவு ரயில் (ரயில் எண் 22863) கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை.

விடியோவில் தென்படும் பயணச்சீட்டு பரிசோதகா், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவா், அந்த ரயிலில் வந்த பயணச்சீட்டு பரிசோதகா் அல்ல. ரயில் நின்றபோது, இறங்க முயற்சித்த பெண் பயணியைப் பாா்த்து அவரை இழுக்க முயற்சித்துள்ளாா். அப்போது சந்தோஷ் மதுபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது. எனவே, அவா் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதோடு, அவா் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory