» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:42:28 PM (IST)

கடந்த 3 ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? என மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது: ஒற்றுமை நடைபயணத்தில் மக்களின் குரல்களை கேட்டேன். எங்களிடம் உள்ள குறைகளை பற்றியும் கேட்டோம். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பேசினோம்.

இளைஞர்களிடம் வேலையை பற்றி எழுப்பிய கேள்விக்கு பலரும் வேலையில்லாமல் இருப்பதாகவும், சிலர் ஊபர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர். மக்கள் அக்னிவீர் திட்டத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தைவிட்டு வெளியேறச் சொல்வதைப் பற்றியும் கூறினார்கள். அக்னிவீர் திட்டம் ராணுவத்திடம் இருந்து வரவில்லை, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து வந்ததாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட அக்னிவீரர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் மக்களுடன் செல்லுமாறு கூறுவது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர். வேலையிண்மை, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை. தமிழகம், கேரளம் முதல் ஹிமாசல் பிரதேசம் வரை அதானி என்ற ஒற்றை பெயரை நாங்கள் கேட்டோம். நாடு முழுவதும் அதானி விவகாரம் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது. அதானி எந்த தொழிலில் நுழைந்தாலும் தோல்வி அடையாமல் இருப்பது எப்படி என்று மக்கள் கேட்கிறார்கள்.

அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு, விமான நிலையங்களை மேலாண்மை செய்வதற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது விதிமுறையில் இல்லை. ஆனால், அதானிக்காக இந்த விதிகள் மாற்றப்பட்டு 6 விமான நிலையங்கள் அதானிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை அதானிக்கு கொடுக்க முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்துறை தலைவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 

இதுதான் மோடி அரசு அதானிக்காக உருவாக்கிய வெளியுறவு கொள்கை. 2014-ல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்திலிருந்த அதானி 2022-ல் எப்படி 2வது இடத்திற்கு முன்னேறினார்? பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு? கடைசி 3 ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகளையும் ராகுல் காந்தி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory