» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்- மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

வெள்ளி 20, மே 2022 11:23:52 AM (IST)

ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள், லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரயில்வே வேலை பெற முயற்சித்தவர்களிடம் இருந்து அவர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.அதே போல் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மீதும் போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டத்தில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதிய வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, பீகாரில் உள்ள 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள்.

பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு ஆகிய இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் லாலுபிரசாத் உறவினர்கள் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாலுபிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஏற்கனவே ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2017ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. உரிமம் வழங்கியதற்காக கைமாறாக 3 ஏக்கர் நிலத்தை அவரும், அவரது குடும்பத்தினரும் வளைத்ததாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory