» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 12 முதல் 14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி எப்போது? மத்திய அரசு விளக்கம்!

செவ்வாய் 18, ஜனவரி 2022 4:35:40 PM (IST)

இந்தியாவில் "12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 87 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரத்து 631 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 66 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 800 பேரும் போட்டுள்ளனர். தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டபோது முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி கள் தொடங்கியது. அடுத்த கட்டமாக மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இந்த வயது பிரிவினருக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும். அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி பிப்ரவரி இறுதிக்குள் போடப்பட உள்ளது. இந்த வயதினர் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த 10-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சத்து 84 ஆயிரத்து 410 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். அவர் கூறுகையில், "12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்” என்றார்.

இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory