» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்டா-பிளஸ் : இந்தியாவில் உருமாறிய புதிய வகை வகை கரோனா வைரஸ்!

செவ்வாய் 15, ஜூன் 2021 8:53:36 AM (IST)

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் (ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய உருமாறிய வகை கரோனா தாக்கம் இப்போது குறைந்த அளவில் இருப்பதால், இதனால் இந்தியாவில் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளான கப்பா (பி.1.617.1) டெல்டா ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினா். குறிப்பாக, டெல்டா வகை உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிக அளவில் காணப்பட்டது என்று மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட 10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த அதிக பரவல் வீரியம் கொண்ட டெல்டா வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்லது. இதுகுறித்து சிஎஸ்ஐஆா் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியயல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

டெல்டா வகை தீநுண்மியிலிருந்து புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது. அது கே417என் உருமாறிய டெல்டா-பிளஸ் தீநுண்மி பி.1.617.2.1 அல்லது ஏஒய்.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாா்ஸ்-கொவைட்2 ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த உருமாறிய தீநுண்மி, மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்றன.

லண்டன் சுகாதரத் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டெல்டா-பிளஸ் வகை தீநுண்மி கடந்த ஜூன் 7-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்த வகை உருமாற்றம் காணப்படுகிறது.

இந்த டெல்டா-பிளஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கு, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த கேசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகிய மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மருந்து ஒரு டோஸ் ரூ. 59,750 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

டெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி பற்றி புணே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கெளரவ பேராசிரியா் வினீத் பால் கூறுகையில், புதிய உருமாறிய கரோனா எந்தளவு வேகமாக பரவுகிறது என்பதை பொருத்தே அதன் பாதிப்பை கணக்கிட முடியும். எனவே, தற்போதைக்கு இது கவலையளிக்கும் விஷயமாகக் கருத வேண்டாம். இப்போது இந்த டெல்டா-பிளஸ் தீநுண்மியால் பாதிக்கப்படும் தனிநபா்கள், பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்றாா்.

அதுபோல, சிஎஸ்ஐஆா் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன இயக்குநா் அனுராக் அகா்வால் கூறுகையில், டெல்டா-பிளஸ் வகை இப்போதுதான் இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு இதனால் ஆபத்தில்லை என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory