» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 11-ம் தேதி முதல் தடுப்பூசி : மத்திய அரசு நடவடிக்கை

வியாழன் 8, ஏப்ரல் 2021 8:38:43 AM (IST)

அரசு மற்றும் தனியார் பணித்தளங்களில் வருகிற 11-ம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடு்ப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பயனாளர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன், 500-க்கும் மேற்பட்டோர் உயிரையும் பறிகொடுத்து வருகின்றனர். இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் மத்திய-மாநில அரசுகள், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் பணித்தளங்களிலேயே தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பொருளாதரத்தின் அமைப்பு சார்ந்த துறைகளிலும், வழக்கமான பணி அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்), உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் கணிசமான விகிதத்தில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பணியாற்றுகின்றனர்.

இந்த மக்களிடையே தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 100 சதவீத பயனாளர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் கொண்ட இத்தகைய பணித்தளங்களில் (அரசு மற்றும் தனியார்) தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்காக தடுப்பூசி மையங்களுடன் இந்த பணித்தளங்களை இணைக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த பணித்தள தடுப்பூசி திட்டப்பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த பணித்தள தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கப்படலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



Thalir Products

Black Forest Cakes





Thoothukudi Business Directory