» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 3:31:36 PM (IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவு செய்வார் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமாா் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா்.
இவா்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
2018, செப்டம்பா் 9-இல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் வெளிநாட்டுத் சதி ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மத்திய புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) விசாரணை முடிவடையும் வரை தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, 11.10,2020-இல் பேரறிவாளன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015-இல் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018-இல் அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் இரு ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை’ என கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நஸீா், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்கறிஞா் கோபால் சங்கரநாராயணன், வழக்கறிஞா் பிரபு ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா் ஆஜராகினா்.
வழக்கறிஞா் சங்கர நாராயணன் வாதிடுகையில், ‘பேரறிவாளன் ‘தடா’ சட்டத்தின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ்தான் தண்டிக்கப்பட்டுள்ளாா். மேலும், ‘தடா’ பிரிவின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே சட்டப்படி தவறாகும்.
இந்த விவகாரத்தில் பல்வேறு தருணங்களில் மத்திய அரசு மெளனம் காத்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்குதான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறுவது பேரறிவாளனின் விடுதலையை தாமதிக்கும் செயலாகும்’ என்று வாதிட்டாா்.
மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நட்ராஜ் ஆஜராகி வாதிடுகையில், ‘பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கான உரிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இதனால், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய உத்தரவிடும் விவகாரத்தில் குடியரசுத் தலைவா்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
அப்போது, சங்கர நாராயணன், ‘இது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்காக முன்வைக்கப்படும் வாதமாகவே தெரிகிறது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புசாசன அமா்வில் முடிவுசெய்யப்பட்ட விவகாரமாகும். 161 சட்ட ஷரத்தைப் பொருத்தமட்டில் மாநில அரசுக்குதான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரறிவாளன் சிறையில் 30 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் இருந்து வருகிறாா். அவருக்கு முதிய வயதில் பெற்றோா் உள்ளனா். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் ஆகி வருவதால் நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.
தமிழக அரசின் தரப்பின் கூடுதல் தலைமை வழக்கறிஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்கறிஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். வழக்கறிஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘‘உலகின் மற்றொரு பகுதியில் ஒரு அதிபா் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திட்டு வருகிறாா். இதுபோன்று இங்கும் கையெழுத்திட்டிருந்தால் இப்பிரச்னையே எழுந்திருக்காது’ என்றாா்.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை விசாரணை தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு தரப்பின் வாதங்களை அப்போது முன்வைக்கலாம் என்றனா். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குடியரசுத் தலைவருக்குப் பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவு செய்வார் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது : மம்தா ஆவேசம்
திங்கள் 8, மார்ச் 2021 11:15:43 AM (IST)

கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள்: பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவு
ஞாயிறு 7, மார்ச் 2021 9:13:14 AM (IST)

பி.எல்.ஐ திட்டம் 5 ஆண்டுகளில் உற்பத்தியை 52,000 கோடி டாலராக உயர்த்தும் : பிரதமர் மோடி பேச்சு
சனி 6, மார்ச் 2021 3:45:16 PM (IST)

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்: - தேவஸ்தானம் அறிவிப்பு
சனி 6, மார்ச் 2021 11:24:47 AM (IST)

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் தகவல்
சனி 6, மார்ச் 2021 8:12:39 AM (IST)

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்
சனி 6, மார்ச் 2021 8:09:48 AM (IST)
