» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் குளிர்காலத்தில் 2வது கரோனா அலை தாக்க கூடும் : மத்திய அரசு எச்சரிக்கை

ஞாயிறு 18, அக்டோபர் 2020 8:35:39 PM (IST)

குளிர்காலத்தில் இரண்டாவது கரோனா வைரஸ் தொற்று அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்று நிதி ஆயோக் உறுப்பினரும் கோவிட் -19 தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவருமான டாக்டர் வினோத் கே. பால் எச்சரிக்கை செய்தார்.

டாக்டர் வினோத் கே. பால் நிதி ஆயோக் உறுப்பினராக சேரும் முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். குடும்ப நலத்துறையில் குழந்தைகளின் நலனைக் காப்பாற்ற சிறப்பாக பணியாற்றியதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இரண்டாவது கரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

அவரது பேட்டி விவரம்: கடந்த மூன்று வார காலத்தில் பல மாநிலங்களில் புதிய கரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் கரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒன்று குளிர்காலத்தில் ஏற்படாது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

குளிர்கால வருகையையொட்டி ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக மீண்டும் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. இந்தியாவில் இன்னும் 90 சதவீத மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது . எனவே, இந்தியாவிலும் கரோனா வைரஸ் இரண்டாவது தொற்று ஏற்படாது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. எதுவும் நடக்கலாம். அந்த வைரஸை பற்றி நாம் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகையால் பண்டிகை காலத்திலும் வட இந்தியாவில் குளிர்காலத்திலும் சில பகுதிகளில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அடுத்து வருகின்ற மாதங்கள் நமக்கு சவாலாக அமையக்கூடும் நாம் இதுவரை பெற்ற லாபம் எல்லாம் கரைந்து போகக் கூடும். எனவே கொஞ்சம்கூட அலட்சியம் நமக்கு இருக்கக்கூடாது. கரோனா வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகிறது என்ற எண்ணம் நமக்கு அலட்சியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் கொஞ்சம்கூடத் தளர்த்த கூடாது.

நாம் கவனமாக இல்லாவிட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தளர்த்தாமல் பின்பற்றாவிட்டால், மீண்டும் கரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடவுள் நமக்கு உதவுவார். கரோனா வைரஸ் இரண்டாவது அலையைத் நாம் தவிர்க்க முடியும் என்று டாக்டர் வினோத் கே. பால் குறிப்பிட்டார். கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது நம்முடைய கையில் தான் உள்ளது. இரண்டாவது அலை வரப்போகிறதா அல்லது நாம் தடுக்கப் போகிறோமா என்பது நம்முடைய கரங்களில்தான் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது எனவும் டாக்டர் பால் குறிப்பிட்டார்.கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

தடுப்பூசி மருந்து பற்றிய சோதனைகளில் வெற்றி கிடைத்ததும் உற்பத்தி,  சேமிப்பு, விநியோகம் பற்றி நமக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கு தேவையான திறன் நம்மிடம் உள்ளது. அந்த திறனை விரைவில்நாம் இன்னும் அதிகரிக்கவும் முடியும்.தடுப்பூசி மருந்துக்கு போதுமான நிதி ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய குடிமக்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவதற்கு குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும் டாக்டர் வினோத் கே. பால் குறிப்பிட்டார். இந்தியாவில் குளிர்காலம்  டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி முடிய 3 மாத காலம் என்று கணக்கிடப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory