» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பசுமை பட்டாசுகளை 400 ஆலைகள் மட்டும் தயாரிக்கலாம் : நீரி அமைப்பு அனுமதி

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 11:54:05 AM (IST)

சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசுகளை தயாரிக்க இந்தியா முழுவதும் 400 ஆலைகளுக்கு மட்டும் நீரி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், விருதுநகர் மாவட்டத்தில்தான் பட்டாசு ஆலைகள் அதிகமாக உள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்ததொழிலில் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் திருட்டுத்தனமாக இந்தியா கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனால் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை கடுமையாக பாதித்தது.

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டாசு விருதுநகர் மாவட்டத்துக்கே கொண்டு வந்தும் விற்பனை செய்யப்பட்டன. இதை தொடர்ந்து  இங்குள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று சீன பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்வதை தடுத்தனர்.

இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் காற்றை மாசுபடுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பதாகவும், இதனால் காற்று, ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறி சிலர் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதற்கு பதில் புகை அதிகம் வெளிவராத வேதிப்பொருட்களையும், சத்தம் குறைவாக தரும் பொருட்களையும் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்த ஆலோசனை வழங்கியது.

இதனைதொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய ஆலோசனையின்படி பட்டாசுகளை தயாரிக்க முடியாமல் சிவகாசி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தவித்தனர். இதனால் அந்த ஆண்டு 3 மாதங்களுக்கு பட்டாசுகளை உற்பத்தி செய்யாமல் ஆலைகள் மூடப்பட்டன.

அதன் பின்னர் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக (நீரி) நிபுணர்கள் சில புதிய வேதிப்பொருட்களை அறிமுகம் செய்து அதனை பயன்படுத்தி பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பசுமை பட்டாசுகள் என்று பெயர் வைத்தனர்.

நீரி வழங்கிய வேதிப்பொருட்களின் பட்டியலை கொண்டு சிவகாசி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் பசுமை பட்டாசுகளை தயாரிக்க முன்வந்தன. இவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு உரிய அனுமதி கேட்டு நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த நிறுவனம் அதற்கான அனுமதியை வழங்கும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது பிரபல நிறுவனங்கள் சில பசுமை பட்டாசுகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பின. பொதுமக்களும் பசுமை பட்டாசுகளை வாங்கி பயன்படுத்தினர். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளை தயாரிக்க முன்வந்த சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களையும் நீரி அமைப்பிடம் பதிவு செய்து உரிய அனுமதி பெற்று பசுமை பட்டாசுகளை தயாரிக்க முன்வந்தன.

அதன் அடிப்படையில் தற்போது வரை 400 ஆலைகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ள சிவகாசியில் இருந்து 400-க்கும் குறைவான ஆலைகளே அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பது பெரும் வியப்பாக உள்ளது.

மற்ற நிறுவனங்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்க முன் வரவில்லையா? அல்லது பசுமை பட்டாசு தயாரிக்க அனுமதி பெற வேண்டியது இல்லை என்ற எண்ணத்தில் உள்ளனரா? என்ற கேள்வி எழுகிறது.எது எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட எவ்வித தடையும் வந்துவிடக்கூடாது, அதே போல் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடும் விதிக்க கூடாது என்பது தான் பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாகவும், பட்டாசு உற்பத்தியாளர்களின் விருப்பமாகவும் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory