» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

புதன் 8, ஜூலை 2020 4:52:33 PM (IST)

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக திமுக தொடர்ந்த புதிய வழக்கில் சபாநாயகர் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.  இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை, என முதல்வர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஆசீர். விJul 9, 2020 - 10:25:06 AM | Posted IP 162.1*****

இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். வேறு யாருக்கும் நோட்டீஸ் அனுப்பவேண்டியது இல்லை. நேரடியா சட்டசபை செயலருக்கு அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று நிகழ்ந்தது என்ன? கொறடா உத்தரவு போடப்பட்டு இருந்ததா? அதை மீறியவர்கள் யார்? அவர்களது விபரம் என்று கேட்டு அந்த விளக்கத்தின் அடிப்படையில் தகுதி நீக்கத்தை உடனே மேற்கொண்டால் போதுமானது. அதை விடுத்து இப்படி ஒவ்வொருவரிடமும் விளக்கம் கேட்டு கொண்டு இருந்தால் நாளும் பொழுதும் நாசமாகத்தான் போகும்

ஜெகன்Jul 8, 2020 - 11:53:40 PM | Posted IP 157.4*****

இந்த மாதிரி கேஸ் தீர்ப்புகள் உடனே ஆக்ஸன் எடுத்தால் மிக்க நன்று அடுத்த தேர்தல் வரப்போகிற நேரம் சில மாதம்....

கலிய மூர்த்திJul 8, 2020 - 05:56:37 PM | Posted IP 141.0*****

இப்படியே நோட்டீஸ் நோட்டீஸ் என்று இந்த ஆட்சியின் பதவிக் காலம் முடிந்து விடும்.எப்படி ஜெயா கேஸ் தீர்ப்பு இறந்த பின்பு வந்ததோ அதுபோலவே இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகும் போல் உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory