» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இன்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ம் தேதி தொடங்கலாம் - ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு

வெள்ளி 3, ஜூலை 2020 10:19:06 AM (IST)

நாடு முழுவதும் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான வகுப்புகள் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவித்து இருக்கிறது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலமும் கடந்துவிட்ட நிலையில், எப்போது கல்லூரிகள் திறக்கப்படும்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்(ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டு, அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த தகவல்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம் வருமாறு:-

* பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ம் தேதிக்குள் வழங்கவேண்டும்.

* இன்ஜினீயரிங் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.

* ஏற்கனவே இன்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 16-ம் தேதி தொடங்கலாம்(பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது). புதிதாக இன்ஜினீயரிங் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.

* தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 15-ம் தேதி தொடங்கலாம். இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு கடைசி தேதி ஆகஸ்டு 10-ம் தேதி ஆகும். நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்டு 1-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை இருக்கும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes


Thoothukudi Business Directory