» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு

செவ்வாய் 30, ஜூன் 2020 11:38:04 AM (IST)

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தடை செய்யப்பட்டுள்ள அந்த செயலிகளில், பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய "டிக்டாக், "ஷேர் இட், "கேம் ஸ்கேனர் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும். இதுதொடர்பாக மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 

செல்ப்பேசிகள் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள அந்தச் செயலிகளுக்கு தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ-வின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. 

நவீன தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிப்பை பொருத்த வரை கடந்த சில ஆண்டுகளாக முன்னணியில் உள்ள இந்தியா, டிஜிட்டல் துறைக்கான பிரதான சந்தையாகவும் இருக்கிறது. அதேவேளையில் தரவுப் பாதுகாப்பு மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கவலைகள் எழுந்த வண்ணம் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தனர். 

இந்நிலையில், அந்த விவகாரம் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக இருபது சமீபத்தில் மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து பல புகார்கள் வந்துள்ளன. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இயங்கக் கூடிய சில செல்ப்பேசி செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களுக்கு அங்கீகாரமில்லாத முறையில் மறைமுகமாக கடத்துவது சில அறிக்கைகள் மூலமாகத் தெரியவந்துள்ளது. 

அவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு எதிரானதாகும். இது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அத்தகைய செயலிகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணைய வழி குற்றத்துக்கான இந்திய ஒருங்கிணைப்பு மையம் பரிந்துரைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory