» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு அனுமதி : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 22, ஜூன் 2020 5:07:47 PM (IST)

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை வரும் ஜூன் 23-ந் தேதி நடைபெற இருந்தது. கரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

கடந்த 18-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டது. "இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று  நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ரத யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசு வாதிட்டது.

"கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் இந்த ஆண்டு பூரி பகவான் ஜெகன்நாத் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கலாம். பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் நிறுத்தப்படக் கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். பகவான் ஜெகன்நாதர் நாளை வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியங்களின்படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது”  என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் வாதாடினார்.

இதனையடுத்து பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்திற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory