» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு!

வியாழன் 2, ஏப்ரல் 2020 12:41:28 PM (IST)இந்தியாவில் கரோனா வைரஸ் பரவ மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறது.

இந்தியாவில், கடந்த ஒரு வார காலத்தில் கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்தது. இதற்கு மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்கள் மீது தனிகவனம் செலுத்தி வருகிறது. டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் இந்த பட்டியலில் உள்ளன. அந்த இடங்களின் விவரம் வருமாறு:-

டெல்லி-நிஜாமுதின் மேற்கு:- தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது, நிஜாமுதின் மேற்கு பகுதி. அது, குறுகிய தெருக்களுக்கும், பெரிய குடியிருப்புகளுக்கும் இடைப்பட்ட காலனி ஆகும். அங்கு கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நடந்த ஒரு மத நிகழ்ச்சியில், வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் அதிக அளவில் நோய் பரவ அந்நிகழ்ச்சி வழிவகுத்து விட்டது.

அதில் பங்கேற்ற தெலுங்கானாவை சேர்ந்த 6 பேரும், காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் கரோனா தாக்கி பலியானார்கள். அதில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த 24 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 441 பேர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பரிசோதனை முடிவு வெளியாகும்போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டன், தலைப்புச் செய்தியில் இடம் பிடித்த பகுதி ஆகும். சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பிய அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனா தாக்கியது. பிறகு அவருடைய மகளுக்கும், 2 உறவினர்களுக்கும் பரவியது. அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும், டாக்டர் மூலமாக அவருடைய மனைவிக்கும் பரவியது. அந்த பகுதி அடங்கிய சகாத்ரா மாவட்டத்தில் 11 பேருக்கு நோய் உறுதி ஆகியுள்ளது.

உ.பி.-நொய்டா:- டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மாவட்டத்தின் கவுதம புத்த நகரில் 38 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு நோய் பரவ நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனமே காரணமாக இருந்துள்ளது. அதனால், அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
உ.பி.-மீரட்:- மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் 19 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இவர்களில் 4 பேர், மராட்டிய மாநிலத்துக்கு சென்று வந்த ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 167 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மும்பை ஒர்லியின் கோலிவாடா பகுதியையும், கோரிகான் புறநகர் பகுதியையும் கரோனா மையப்புள்ளிகளாக மாநில அரசு அறிவித்துள்ளது.

புனே:- மராட்டிய மாநிலத்தில் முதலில் புனே நகரில்தான் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது, 46 நோயாளிகள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கண்காணிப்பில் உள்ளனர்.

கேரளா-காசர்கோடு:- நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காசர்கோடும் ஒன்று. 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும், அவர்களுடன் பழகியவர்களுமே இதற்கு காரணம். பத்தனம்திட்டாவில் 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டபோதிலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.

குஜராத்-ஆமதாபாத்:- குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆமதாபாத் நகரம், மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்-பில்வாரா:- ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா என்ற ஜவுளி நகரில் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில், ஒரு டாக்டருக்குத்தான் நோய் கண்டறியப்பட்டது. பெரும்பாலும், மருத்துவமனை ஊழியர்களோ அல்லது அங்கு சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளோ நோயின் பிடியில் சிக்கி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் மேலும் 386 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது.

இந்த திடீர் உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய அரசு தரப்பில் சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இந்த திடீர் உயர்வு, தேசிய அளவிலான போக்கை காட்டவில்லை. டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், நாடு முழுவதும் பயணம் செய்ததே இதற்கு காரணம். ஆகவே, அந்த நபர்களையும், அவர்கள் தொடர்பு கொண்டவர்களையும் கண்டறிந்து பரிசோதிக்குமாறும், கரோனா அறிகுறி உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை 3 லட்சத்து 20 ஆயிரம் படுக்கைகளாக மாற்றித்தர ரெயில்வே ஒப்புக்கொண்டுள்ளது. முதலில், 5 ஆயிரம் பெட்டிகளை படுக்கைகளாக மாற்றும்பணி தொடங்கி உள்ளது. மருத்துவ உபகரணங்கள், முக கவசங்கள் உள்ளிட்டவை விமானம் மூலம் சில நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes
Thoothukudi Business Directory