» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: பேபி மப்ளர் மேனுக்கு சிறப்பு அழைப்பு: அரசியல் தலைவர்களுக்கு இல்லை

வெள்ளி 14, பிப்ரவரி 2020 10:25:22 AM (IST)கேஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு பேபி மப்ளர் மேனுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற மாநில முதல்-அமைச்சர்களை அழைக்கப்போவதில்லை எனவும் அக்கட்சி தெரிவித்தது.

டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக அரவிந்த் கேஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் கேஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். அவர், முதல்-அமைச்சர் ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும். டெல்லி ராமலீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. கேஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் மாநில சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் வெற்றிப்பெற்றால் பதவி ஏற்பு விழாவில் பிற மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோன்று டெல்லியில் கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்- அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் பேசுகையில், "டெல்லியின் முதல்-அமைச்சராக கேஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சியாகும். இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிற மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அழைப்பு இல்லை” என தெரிவித்தார்.பதவி ஏற்பு விழாவில் டெல்லி மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஆம் ஆத்மியின் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு கேஜ்ரிவால் வேடமிட்டு பெற்றோர்கள் ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் கேஜ்ரிவால் வரவில்லை. இதனால், குழந்தையின் பெற்றோர் அவரை சந்திக்க முடியாமல் வீடு திரும்பினர்.

கேஜ்ரிவால்போல தொப்பி, மப்ளர் அணிந்து, மீசை வரைந்து, சிறிய கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த அந்த குழந்தை பற்றிய வீடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. குழந்தையை பலரும் கொஞ்சும் விதமாக கருத்துகளை பதிவு செய்தனர். இந்தநிலையில் கேஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு வருமாறு அந்த குழந்தைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டு உள்ளார்” என கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory