» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு!!

திங்கள் 20, ஜனவரி 2020 5:37:58 PM (IST)

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங் (23), பவன்குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய்குமார் சிங் (31) ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் அந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அவர்களுடைய மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்குமார் சிங், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்   நிராகரித்து விட்டார். இதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரையும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரா  புதிய மரண வாரண்டை பிறப்பித்தார். இதனால் அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக 4 பேரில் ஒருவரான பவன் குமார் குப்தா, நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குற்றம் நடந்த போது தான் இளம் குற்றவாளி என்றும், எனவே தன்னை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதே காரணத்தை குறிப்பிட்டு தான் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது பற்றியும் மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.

பவன்குமார் குப்தாவின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நிர்பயா வழக்கின் குற்றவாளி பவன் குமார் சிறுவன் அல்ல, பவனின் பிறப்பு சான்றிதழே அதற்கு ஆதாரம் என  டெல்லி காவல்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். 

பவன் குமாரின் வழக்கை மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் வயது தொடர்பான கோரிக்கையுடன் ஏன் மீண்டும் மனுத்தாக்கல் செய்கிறீர்கள்?  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யபட்டதே? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர்  குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory