» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்காதீர்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

திங்கள் 20, ஜனவரி 2020 5:27:34 PM (IST)

பொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்காதீர்கள்என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

அரசு பொதுத்தேர்வை எழுதும் 10, 11, 12-வது வகுப்பு மாணவர்கள் பரீட்சையை பயமின்றி, பதட்டமின்றி எழுதுவதற்காக ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். 3-வது முறையாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி கடந்த 16-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை வந்ததால் அது 20-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி டெல்லி தல்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். அவர்களில் 1,050 பேர் கட்டுரை போட்டி நடத்தி நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

நான் ஆட்சி நிர்வாகத்தில் ஓய்வின்றி பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யும் முன்பு முதல்-மந்திரியாக இருந்தேன். இந்த பதவிகள் மூலம் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதன் மூலம் பல்வேறு வித்தியாசமான அனுபவங்களை பெற்று இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என்று கேட்டால் மாணவர்களுடன் கலந்துரையாடும் (பரிக்ஷா பேசர்ச்சா) நிகழ்ச்சிதான் என்று சொல்வேன். மாணவர்களுடன் கலந்துரையாடும் போது இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தவையாகும்.

கல்வியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்க வேண்டும். ஆனால் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமே எல்லாமுமாக மாறி விடாது. பொதுத் தேர்வுதான் பள்ளி படிப்பில் மிக முக்கியமானது என்ற மனநிலையில் பெரும் பாலான மாணவர்கள் இருக் கிறார்கள். அந்த மனநிலையில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியில் வர வேண்டும். நல்ல மதிப்பெண் பெறுவதை தவிர வேறுபல நல்ல விஷயங்கள் கல்வியில் உள்ளன. உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. அந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாணவர்கள் பெற வேண்டும். திறமையை நீங்கள் மேம்படுத்தி கொள்ளாவிட்டால் வெறும் எந்திர மொம்மைகளாக தான் இருப்பீர்கள். இந்த நிலையில் இருந்து உங்களை விடுவித்து கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் இன்று எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு துறைகளிலும் நவீன அறிவியலுக்கு ஏற்ப வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திறமையை மேம்படுத்திக் கொள்ளும்போது சில தோல்விகள் வருவது இயற்கைதான். தோல்விகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் படித்து கொள்ள முடியும். இதற்கு நம்மை சுற்றி எத்தனையோ காரணங்கள் உள்ளன.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வ தற்காக நம்முடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பினார்கள். அதை நிலவில் தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த தினத்தன்று நான் ஸ்ரீஹரி கோட்டாவில்தான் இருந் தேன். என்னை சிலர் அங்கு செல்லாதீர்கள் என்று கூறினார்கள். என்றாலும் விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் சென்றேன். அந்த திட்டம் தோல்வி அடைந்ததாக என்னிடம் தெரிவித்தனர். என்றாலும் கவலைப்படாதீர்கள் என்று தட்டிக் கொடுத்து விட்டு வந்தேன்.

இளைஞர்கள் நல்ல மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு இளைஞனும் நல்ல கருத்துகளை வெளியிட வேண்டும். குறிப்பாக எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். பொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்காதீர்கள். மதிப்பெண்ணை நினைத்து மன அழுத்தத்தில் ஆழ்ந்து   விடக்கூடாது. தேர்வை எதிர்கொள்ளும் போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வை எழுத வேண்டும். தேர்வை நினைத்து சோர்வு அடையும் மனநிலை வரவே கூடாது. சந்திரயான்-2 தோல்வி அடைந்தபோது முதலில் எனக்கும் சற்று சோர்வு வந்தது. ஆனால் உடனே அதிலிருந்து மீண்டு விட்டேன். மாணவர்களும் அதே போன்று இருக்க வேண்டும். ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் புதிய பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் ஒரு பகுதி தேர்வு என்பது நமது வாழ்க்கை அல்ல. அது நமது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதிலும் பொதுத் தேர்வு என்பது நமது கல்வி பயணத்தில் ஒரு அங்கம். அவ்வளவுதான்.  அதற்காக முழு கவனத்தையும் மதிப்பெண் ஒன்றையே நினைத்துக் கொண்டு செலுத்தக் கூடாது. தேர்வில் பெறும் மதிப்பெண் முக்கியமானதுதான். ஆனால் அதுதான் வாழ்க்கை என்பது சரியான கருத்து அல்ல. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். 2001-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடர் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அந்த தொடரில் இந்திய அணி கடும் பின்னடைவுகளை சந்தித்தது. இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

அந்த சமயத்தில் ராகுல் டிராவிட்டும், வி.வி.எஸ். லட்சுமணனும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டனர். ஒட்டு மொத்த அணியின் மனநிலையை அவர்கள் இருவரும் மாற்றியதை நாம் மறந்து விடக்கூடாது. தற்காலிக தோல்வி ஏற்படும்போது மனதில் கவலையை ஏற்றக்கூடாது. நமக்கு இன்னும் நல்ல வெற்றி வரவில்லை என்று நினைக்க வேண்டும். ஒரு போட்டியில் அனில்கும்ளே காயங்களுடன் விளையாடி நமது கிரிக்கெட் அணிக்கு வெற்றி தேடி தந்ததை நினைவில் கொள்ளுங்கள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தொழில் நுட்பம் தொடர்பான பயம் இருக்கிறது. அத்தகைய பயம் தேவையில்லை. தொழில்நுட்பத்தை நீங்கள் ஒவ்வொருவரும் நண்பனாக பார்க்க வேண்டும். தொழில் நுட்ப அறிவை நிரம்ப பெற வேண்டும். தொழில்நுட்பமானது அடிக்கடி மாறும். எனவே அதில் புதிய விஷயங்களை உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால் தான் தொழில் நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ஏற்ப நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நான்கு பேர் கையிலும் இப்போது செல்போன் இருக்கிறது. எனவே புதிய தொழில்நுட்பங்களில் இருந்து நாம் விலகி செல்ல முடியாது. இந்த நிலையில் நாம் அடிப்படை கடமையில் கவனமாக இருக்க வேண்டும். அடிப்படை கடமைதான் நம்மை வாழ வைக்கும் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார்.

இன்று நான் உங்களுக்கு உற்சாகம் அளித்து ஊக்கம் அளிக்கும் வகையில் தகவல்களை தந்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் 2047-ல் இந்தியாவின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு தருபவர்களாக இருப்பீர்கள். நாம் அப்போது சுதந்திரத்தின் 100-வது ஆண்டை கொண்டாடுவோம். எனவே நாட்டின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு ஒவ்வொரு இளைஞரும் தங்களது பங்களிப்பை தர வேண்டும். இந்த தலைமுறை இளைஞர்கள் நமது சட்ட அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அடிப்படை கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் உரையாற் றினார். இதற்காக 2 ஆயிரம் மாணவர்களில் கேள்வி கேட்பதற்கு என மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.  மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளித்து பேசிய கலந்துரையாடல் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வானொலிகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. மேலும் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மோடியின் கலந்துரையாடல் நேரலையாக வெளியானது.  தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிரதமர் மோடி உரையை மாணவ- மாணவிகள் கேட்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes


Thalir Products
Thoothukudi Business Directory