» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு கடுமையான சட்டம் - மத்திய அரசு

திங்கள் 20, ஜனவரி 2020 12:14:17 PM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு கடுமையான சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு அதன் பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.

வேலைபார்க்கும் இடம் மற்றும் அலுவலகங்களில் பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பல நூற்றாண்டுகளாக  பெண்களுக்கு வலி மற்றும் துன்பங்களை கொடுத்து வருகின்றன. ஆனால் #மீடூ இயக்கம் தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு விடிவு பிறந்து உள்ளது.  இதில்  ஊடகங்களும் ஒரு  முக்கிய பங்கை கொண்டுள்ளது. #மீடூ (MeToo) என்பது ஹேஸ்டேக்காக உருவாவதற்கு முன்பே ஓர் இயக்கமாக உருவாகிவிட்டது. ஆஃப்ரோ - அமெரிக்க இனத்தை சேர்ந்த தரானா புர்க் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த இயக்கத்தை 2006ல் தொடங்கினார். 2006ல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த "மீடூ" வைரல் ஆனது 2017 அக்டோபர் 10 ந்தேதி தான். அப்போது, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன் மீது 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் வைத்தனர்.  இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா, நடிகர்  நானா படேகர்  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். அதை தொடர்ந்து இந்தியாவில் "மீடூ" வைரலாகியது.  இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர். பத்திரிகையாளர்களும் இதில் விலக்கல்ல.  பத்திரிகையாளராக இருந்து மத்திய மந்திரியாக இருந்த எம்.ஜே. அக்பர்  மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு தனது பதவியை இழந்தார்.

தமிழகத்தில் பாடகி சின்மயி தீவிரமாக இந்த #மீடூ (MeToo) ஹேஸ்டேக்கின் கீழ் புகார்களை எழுதி வருகிறார். பாடலாசிரியர் வைரமுத்து மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வைரமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.  இந்த #மீடூ (MeToo) ஹேஷ்டேக் மூலம் பெண்கள் வெளிப்படையாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்கிறார்கள்.  "மீடூ" விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது

தேசிய குற்ற ஆவணப் காப்பகம் தகவலின் படி  வேலை செய்யும் இடங்கள் அல்லது அலுவலக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் சொற்கள், சைகை அல்லது செயல்) 2017 ஆம் ஆண்டில் 479, 2018 ஆம் ஆண்டு  401 ஆகும். நகரங்களில், 2018 ல் டெல்லி (28), பெங்களூரு (20), புனே (12) மற்றும் மும்பை (12) ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 

பொது இடங்கள்  உட்பட தங்குமிடம் மற்றும் பிற இடங்களை சேர்த்து 2018 இல் மொத்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 20,962 ஆகும். "மீடூ"வை தொடர்ந்து  வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்காக சட்டத்தை வலுப்படுத்த  உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மத்திய அரசு  ஒரு குழுவை அமைத்தது.

"மீடூ"  இயக்கம்  தொடங்கிய  பின்னர், பல பெண்கள் தங்களுக்கு  பாலியல் ரீதியான துன்பங்களை  சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இதை தொடர்ந்து, 2018 அக்டோபரில் முதலில் மத்திய அமைச்சர்கள்  குழு  அமைக்கப்பட்டது. இந்த குழு பின்னர் அமித்ஷாவின் தலைமையில்  2019 ஜூலை மாதம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. தற்போது அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு  அதன் பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 

மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்ப்பது குறித்த பரிந்துரைகள் பொதுமக்களின் கருத்து கேட்கப்படும்  என  அந்த அதிகாரி தெரிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனிதவள மற்றும் மேம்பாட்டு மந்திரி  ரமேஷ் போக்ரியால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் அரசாங்கத்தின் மற்ற குழு உறுப்பினர்கள் ஆவார்கள். 

இது குறித்து  மற்றொரு அதிகாரி  கூறும் போது, பணியிடத்தில் தற்போதுள்ள பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஐபிசியின் மறுசீரமைப்பு முடிந்ததும் இணைக்கப்படும். 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிசியை மறுதொடக்கம் செய்வதற்கான மற்றொரு திட்டத்தில் உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) செயல்பட்டு வருகிறது. ஐபிசி மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர். பிசி) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளைத் திருத்துவதற்கு பல ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாநில அரசாங்கங்கள், போலீஸ்  ஆராய்ச்சி அமைப்பு  மற்றும் மேம்பாட்டு பணியகத்தால் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory