» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

திங்கள் 13, ஜனவரி 2020 8:26:17 AM (IST)குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் இந்த போராட்டம் அதிகமாக நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றார். குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததற்காக, அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். கொல்கத்தாவின் மையப்பகுதியான எஸ்பிளனேடில் அவர்கள் விடிய, விடிய அமர்ந்திருந்தனர். மோடியே திரும்பிச்செல், பா.ஜனதா ஒழிக என்று எழுதப்பட்ட பதாகைகளையும், கருப்பு கொடியையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர். பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. அதுபோல், பிரதமர் மோடி கொல்கத்தா துறைமுக விழாவில் பங்கேற்ற நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்துக்கு எதிரிலும் இரு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்றிச்சென்று அப்புறப்படுத்தினர். இதற்கிடையே, நேற்று முன்தினம் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி, ஹவுரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் தலைமையகத்துக்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி, அங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- இந்திய இளைஞர்களிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்கள், சவால்களை கண்டு பயப்படுபவர்கள் அல்ல, சவால்களுக்கே சவால் விடுபவர்கள். அவர்கள் துடிப்பானவர்கள். அதனால்தான், சுவாமி விவேகானந்தர், "துடிப்பான 100 இளைஞர்களை கொடுங் கள். நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்” என்று கூறினார்.

அப்படிப்பட்ட இளைஞர்களை குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள், அந்த சட்டம் குறித்து வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டியது நமது கடமை. குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஒரே இரவில் திடீரென கொண்டுவரவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடியுரிமை சட்டத்தைத்தான் திருத்தி உள்ளோம். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை கொடுப்பதற்காக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று சுதந்திரத்துக்கு பிறகு மகாத்மா காந்தி கூறினார். அவரைப் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் கனவை நாங்கள் நனவாக்குகிறோம். நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்ததால்தான், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன? நமது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது என்பதெல்லாம் உலகத்தால் கவனிக்கப்படுகிறது. இவற்றுக்கு பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த சட்டம் வந்திருக்காவிட்டால், இவையெல்லாம் உலகத்துக்கு தெரிந்து இருக்காது.

இந்த நாடுகளில் துன்புறுத்தப்பட்டு ஓடி வரும் மக்களை அப்படியே சாக விடலாமா? அவர்களை பாதுகாப்பது நமது கடமை அல்லவா. குடியுரிமை திருத்த சட்டம் என்பது அவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கான சட்டம். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. உலகத்தின் எந்த நாட்டை சேர்ந்தவரும், எந்த மதத்தை சேர்ந்தவரும், நாத்திகரோ, ஆத்திகரோ, இந்தியா மீதும், இந்திய அரசியல் சட்டம் மீதும் நம்பிக்கை உள்ள எவரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மீண்டும் உறுதி அளிக்கிறேன்.

வடகிழக்கு மாநிலங்கள், நமது பெருமைக்குரியவை. அந்த மக்களின் தனித்த அடையாளமும், கலாசாரமும் பாதுகாக்கப்படும். அவர்களின் நலன்களுக்கு எந்த தீங்கும் வராது. இந்த மடத்துக்கு வருவது என் வீட்டுக்கு வருவது போன்றது. கடந்த முறை நான் வந்தபோது, சுவாமி ஆத்மஸ்தானந்தாவிடம் ஆசி பெற்றேன். இப்போது அவர் இல்லாவிட்டாலும், அவரது பணிகளும், அவர் காட்டிய வழியும் நம்மை வழிநடத்தும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம். 

பின்னர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுச்செயலாளர் சுவாமி சுவிரானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராமகிருஷ்ண மிஷன் அரசியல் சார்பற்ற அமைப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி, இந்திய தலைவர். மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் தலைவர். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இங்கு வருகிறார்கள். அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டி இருந்தார். கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயங்களில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். ராமகிருஷ்ண மிஷனில், விவேகானந்தர் தியானம் செய்த அறையில் பிரதமர் மோடி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJan 14, 2020 - 09:47:24 AM | Posted IP 108.1*****

குடியுரிமை சட்ட திருத்தமசோதாவுக்கு நீங்களே முதலில் வாக்களிக்கவில்லை. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் முதலில் இளைஞர்கள் மத்தியில் இதை சொல்லுங்கள் பார்ப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory