» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் கோத்தபய சந்திப்பு: இலங்கைக்கு 45 கோடி டாலர்கள் கடன் வழங்க இந்தியா முடிவு

வெள்ளி 29, நவம்பர் 2019 5:41:41 PM (IST)இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இலங்கை நாட்டின் வளர்ச்சிக்காக 45 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்று, அதிபராக பதவியேற்றார். அதன்பிற்கு, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிபராக பொறுப்பேற்றபிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு இன்று காலை ராஷ்டிரபதி பவனில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் கோத்தபய ராஜபக்ச மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இருநாட்டு உயரதிகாரிகளும் உடனிருந்தனர். இதில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது, பிராந்திய பிரச்சனைகள் ஆகியவை குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, மீனவர்கள் நலன் ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ் மக்கள் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும்

பின்னர், இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இலங்கை அதிபராக பதவியேற்றதும், தன் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வந்துள்ளது, நமக்கு பெரும் கவுரவமாகும். நிலையான இலங்கை என்பது இந்தியாவுக்கு மட்டும் விருப்பமல்ல, ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான விருப்பமாகும். இலங்கையில் உள்ள தமிழ் சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

”இருதரப்பு பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இலங்கை அதிபரிடம் நான் வாக்குறுதி அளித்துள்ளேன். அதன்படி, இலங்கை வளர்ச்சிக்காக 45 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

”இலங்கையில், சவாலாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட 500 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, ”பொருளாதார ஒத்துழைப்பை நல்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக நான் கடுமையாக பணியாற்றுவேன்” என்று உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory