» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாக்கூர் நீக்கம்: பாஜக அதிரடி

வியாழன் 28, நவம்பர் 2019 3:18:22 PM (IST)

நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று மக்களவையில் கூறிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று அறிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு எஸ்.பி.ஜி திருத்த மசோதா மீது நேற்று மக்களவையில் விவாதம் நடைபெற்றபோது திமுக எம்பி ஆ.ராசா தன் கருத்துகளை முன்வைத்தார். அப்போது மகாத்மா காந்தியை ஏன் நாதுராம் கோட்சே கொன்றார் என்பதற்கு விளக்கமளித்துப் பேசினார். மகாத்மா காந்தி ஒரு குறிப்பிட்ட கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்ததால் தான் நாதுராம் கோட்சே அவரை சுட்டுக்கொன்றார். தனக்கு 32 ஆண்டுகளாக காந்தியடிகள் மீது வெறுப்பு இருந்ததாக நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார் என ஆ.ராசா பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜக எம்பி பிரக்யா தாகூர், ”நீங்கள் ஒரு தேசபக்தரை இங்கு உதாரணமாக கூறமுடியாது” என கூறினார்.

நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என பிராக்யா தாகூர் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் குரல் எழுப்பினர். பிராக்யா தாகூரை இருக்கையில் அமரும்படி அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். அதன்பின் ஆ.ராஜா கூறிய கருத்துக்கள் மட்டும் பதிவு செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்தார். பிரக்யா தாக்கூரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சாத்வி பிரக்யா தாகூர் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில்,”சாத்வி பிரக்யாவின் கருத்து கண்டனத்திற்குரியது. ஒழுங்கு நடவடிக்கையாக, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”நடப்பு குளிர்கால கூட்டத்தொடருக்கு மத்தியில் நடைபெறும் பாராளுமன்ற பாஜக குழு கூட்டத்தில் பிரக்யா தாக்கூர் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory