» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதன் 20, நவம்பர் 2019 5:51:05 PM (IST)

சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு 4 வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாதது பலநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. சில பெண் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக சபரிமலை வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை பழைய உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவில் தெளிவு இல்லை என்று கூறிய கேரள மாநில அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தது. அதன் அடிப்படையில் சபரிமலையில் இந்த ஆண்டு பெண்கள் தரிசனம் செய்ய கேரள மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கேரள போலீசார் திருப்பி அனுப்புகிறார்கள். 

இந்தநிலையில் சபரிமலை கோவில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையில் உள்ள அமர்வில் இந்த விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- சபரிமலை கோவிலுக்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும்படி கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி கேரள மாநில அரசை கேட்டு இருந்தோம். ஆனால் அவர்கள் இன்று திருவாங்கூர்-கொச்சி இந்து மத அமைப்புகள் சட்டத்தை திருத்தியது தொடர்பான ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். இதை ஏற்க இயலாது.

குருவாயூரில் கோவிலுக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்றே பிரத்யேகமாக தனி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோன்று சபரிமலை ஆலய நிர்வாகத்துக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்று புதிய தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும். கேரள மாநில அரசு இந்த தனிச்சட்டத்தை உருவாக்குவதற்காக 4 வார காலம் அவகாசம் அளிக்கிறோம். அந்த தனிச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3-ந்தேதிக்குள் கேரள மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

சபரிமலை ஆலயத்துக்கென தனிச்சட்டம் உருவாக்குவதை தாமதப்படுத்தக்கூடாது. தனி சட்டம் உருவாக்கினால் தான் பக்தர்கள் தரிசனத்துக்கு உதவி செய்ய முடியும். புதிய அறிவிப்புகள் வெளிவரும் வரை பழைய உத்தரவு செல்லும். அதன்படி சபரிமலை ஆலயத்தில் தற்போது அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory