» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலுங்கானாவில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை எதிரொலி : பஸ் ஊழியர்களின் போராட்டம் தீவிரம்!!!

திங்கள் 14, அக்டோபர் 2019 12:30:51 PM (IST)

தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தசரா பண்டிகைக்கு முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 9-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வேண்டும் என்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இதையடுத்து, 5-ந் தேதிக்குள் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சந்திரசேகர ராவ் எச்சரித்தார். ஆனால், யாரும் பணிக்கு திரும்பாததால், 48 ஆயிரம் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெலுங்கானா அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்களை இயக்க சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

போக்குவரத்துக்கு இடையூறாக தொழிலாளர்கள் யாரேனும் மறியல், போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய போலீசாருக்கு சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே போராட்டத்தின் போது பஸ் டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் தீக்குளித்தார். உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பஸ் டிரைவர் உடல் வைக்கப்பட்டு இருந்த மருத்துவமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு கூடிய போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் தெலுங்கானா அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் டிரைவரின் சொந்த மாவட்டமான கம்மம் மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. சாலையில் செல்லும் அரசு பஸ்களை சிறைப்பிடித்தல், பஸ்களை அடித்து சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்து உள்ளது.

கம்மம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்த பஸ் ஊழியர்கள் அழைப்பு விடுத்து உள்ளனர். அவர்களுடைய இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில் சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் அவர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். இதுபோன்ற போராட்டத்துக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். பஸ்களை தடுத்தல், சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு பார்த்துக் கொண்டிருக்காது. கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory