» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்

வியாழன் 3, அக்டோபர் 2019 12:30:40 PM (IST)

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, அவரை சிபிஐ கைது செய்து, காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்ததால் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5ம் தேதி அவரை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தினர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19-ந் தேதி அவருடைய நீதிமன்ற காவல் இன்று (அக்டோபர் 3ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரும் மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அவர் சாட்சியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதாலும், சிபிஐ விசாரணை முன்னேறிய நிலையில் இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை. எனவே, மனுதாரரின் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என டில்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் சிபிஐ நீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றம் இரண்டும் ஜாமீன் மறுத்ததை அடுத்து ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு என்றைக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory