» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்!!

திங்கள் 16, செப்டம்பர் 2019 10:46:48 AM (IST)ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே இருக்கும் கண்டிபோச்சம்மா கோயில் பகுதியிலிருந்து கோதாவரி ஆற்றின் ஓரம் இருக்கும் பாபிகொண்டலு மலைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம், பயணிகள், ஊழியர்கள் உள்பட 60 பேர் படகில் சுற்றுலா சென்றனர். சுமார் ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு, ஆற்றின் கரையில் அமைந்துள்ள தூத்துகுண்டா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட ஓட்டையால் படகுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோதாவரியில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

படகில் ஏற்பட்ட ஓட்டை, கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆகியவை காரணமாக படகு நிலைகுலைந்து கவிழ்ந்தது. உடன், படகில் இருந்த 60 பேரும் தண்ணீரில் விழுந்தனர். விபத்து நேரிட்டபோது படகில் 27 பேருக்கு மட்டுமே தேவையான உயிர் காக்கும் கவச உடைகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி 27 பயணிகள் கரை சேர்வதற்காக ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட தூத்துகுண்டா கிராமத்தினர் ஆற்றில் குதித்து அவர்களை மீட்டுக் கரை சேர்த்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள், உயரதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், போலீஸார், வருவாய் துறையினர், நீச்சல் வீரர்கள் ஆகியோரை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அனுப்பி, கோதாவரி ஆற்றில் காணாமல் போனவர்களை மீட்டு கரைசேர்க்குமாறு உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர்கள், கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவைச் சேர்ந்த, 2 குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் என சுமார் 140 பேரைக் கொண்ட மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 25 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.

பிரதமர் மோடி இரங்கல்: 

 படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உறவுகளை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory