» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வட இந்திய இளைஞர்கள் வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள்: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

திங்கள் 16, செப்டம்பர் 2019 9:11:16 AM (IST)

"வட இந்திய இளைஞர்கள் வேலை செய்ய தகுதியற்றவர்கள்" என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

‘கார்கள் விற்பனை குறைவுக்கு ஓலா, உபேர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள்தான் காரணம்,’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறிய கருத்தை பலர் விமர்சித்தனர். ‘இந்தியாவின் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும்,’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வேலைவாய்ப்பின்மை குறித்து மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்த கருத்துக்கும் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசம், பரேலியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாரிடம், பொருளாதார மந்தநிலையில் பலர் வேலை வாய்ப்பின்றி இருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கங்வார், ‘‘நாட்டில் வேலை வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. வட இந்தியாவுக்கு ஆட்கள் தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள், இங்கு தகுதியான இளைஞர்கள் இல்லை என கூறுகின்றன. பொருளாதார மந்த நிலை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,’’ என்றார்.

அவருடைய இந்த கருத்துக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘இளைஞர்கள் பற்றி அமைச்சரின் கருத்து மோசமானது,’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், ‘‘அமைச்சர் கங்வார் கருத்துக்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு பக்கம் மக்கள் வேலை இழக்கின்றனர். மறுபக்கம் புதிய வேலைகள் உருவாக்கப்படவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதில், இளைஞர்களுக்கு தகுதி இல்லை என அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்,’’ என்றார்.

பிரியங்கா கண்டனம்

காங். பொதுச் செயலாளர் பிரியங்கா டிவிட்டரில், ‘அமைச்சர் அவர்களே, உங்கள் அரசு 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் உள்ளது. இங்கு எந்த வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. உங்கள் அரசு கொண்டு வந்த பொருளாதார மந்தநிலையால், ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகளும் பறிபோய் விட்டன. தற்போது, நீங்கள் வட இந்தியர்களை அவமானப்படுத்தி விட்டு தப்பிக்க விரும்புகிறீர்கள்,’ என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications
Thoothukudi Business Directory