» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிளாஸ்டிக்களுக்கு உலகம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது : ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 9:15:53 AM (IST)

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. மாநாட்டில் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நிலச் சீரழிவை தடுப்பதற்காக கடந்த 1994ம் ஆண்டு ஜூன் 17ம் நாள் பாரிசில் ஐ.நா. நிலம் சீரழிவுக்கு எதிரான மாநாடு (United Nations Convention to Combat Desertification) நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு 196 நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் அங்கீகாரம் வழங்கியது. இந்தியா 1996ம் ஆண்டு இந்த மாநாட்டை அங்கீகரித்தது.

இந்நிலையில் உலக  சுற்றுச்சுழல் அழிவு மற்றும் நில சீரழிவுக்கு எதிரான ஐ.நாவின்  14 -வது மாநாடு (14th Conference of Parties, COP 14 United Nations Convention to Combat Desertification) உத்தரபிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 196 நாடுகளை சேர்ந்த 5,000 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதன் விவரம் : பருவநிலை மாற்றத்தால் உலகம் பல எதிர்மறையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். பருவநிலை மாற்றத்தால் உயரும் கடல் மட்டம், வழக்கத்திற்கு மாறான மழை பொழிவு, புயல்கள், அதீத வெட்பநிலை ஆகியவை காரணமாக நிலங்கள் சீரழிக்கின்றன.

பருவநிலை மாற்றம் மற்றும் நிலச் சீரழிவை தடுக்க தெற்கு திசை நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை இந்தியா மகிழ்ச்சியுடன் முன்வைக்கும்.இனி வரும் வருடங்களில் இந்தியாவில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எனது அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உலகமும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்.

பிளாஸ்டிக் கழிவுகளால் லட்சக்கணக்கான ஏக்கர் வளமான நிலங்கள் சீரழிந்து வருகின்றன. இதை தடுக்காவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும் அந்த நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படாமல் போய்விடும்.இந்தியாவில் 2.1 கோடி ஹெக்டேர் சீரழந்துள்ள நிலங்களை மீட்பதற்கு எனது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் வரும் 2030ம் ஆண்டுக்குள் 2.6 கோடி ஹெக்டேர் நிலம் புனரமைக்கப்படும்.

இந்தியா தன் விண்வெளி தொழில்நுட்பம் மூலம் நிலம் சீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு வருவதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். செயற்கைகோள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் நிலங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள இந்தியா தன் நட்பு நாடுகளுக்கு உதவி செய்யும்.

இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை காடுகளின் பரப்பு 8 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். நிலத்தின் மண் வளத்தை பரிசோதித்து அதன் தன்மைகளை குறிக்கும் சுகாதார அட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் அந்தந்த மண்ணின் தரத்திற்கேற்ப விவசாயிகள் பயிரிடுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory