» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

திங்கள் 9, செப்டம்பர் 2019 9:15:07 AM (IST)

தரை இறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்து உள்ளார்.

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது.

சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த 1,471 கிலோ எடை கொண்ட லேண்டரை நேற்று முன்தினம் அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் சுமார் 1½ கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பெரிய பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதள பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் விக்ரம் லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்களும் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லேண்டர் நிலவின் நிலப்பகுதியை நோக்கி வேகமாக இறங்கியது. லேண்டரை மெதுவாக தரை இறக்குவதற்காக சமிக்ஞை மூலம் அதன் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்தனர். அப்படி கீழ் நோக்கி வரும் சமயத்தில், நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் லேண்டரில் உள்ள என்ஜின்கள் இயங்குவதில் கோளாறு ஏற்பட்டு, அதன் காரணமாக திடீரென்று பாதை மாறி விலகிச் சென்று விழுந்து நொறுங்கி இருக்கலாம் அல்லது வெடித்துச் சிதறி இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இது சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவாக அமைந்தது.

என்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால் மாயமான லேண்டரை பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை.

விக்ரம் லேண்டர் நிலவின் தரை பகுதியில் விழுந்து கிடப்பதை ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "நிலவின் தரை பகுதியில் லேண்டர் கிடப்பதை நாங்கள் கண்டுபிடித்து இருக்கிறோம். அது வேகமாக கீழ் நோக்கி வந்து விழுந்திருக்க வேண்டும் என கருதுகிறோம்” என்றார்.

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்து கிடப்பதை ஆர்பிட்டர் வெப்ப படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார். கீழே விழுந்த லேண்டர் சேதம் அடைந்து விட்டதா? என்று கேட்டதற்கு, "அதுபற்றி தெரியவில்லை” என்று பதில் அளித்தார். ஆர்பிட்டர் நல்ல முறையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அது வழக்கம் போல் நிலவை சுற்றி வருவதாகவும் பேட்டியின் போது சிவன் தெரிவித்தார். லேண்டரின் நிலைமை எப்படி உள்ளது? என்பது தெரியாத போதிலும், அது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது விஞ்ஞானிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து உள்ளது.

நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான் (நிலவில் அது ஒரு நாள்). எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி படும். லேண்டரில் உள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே 2 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 12 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளி படும். ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்படும் நிலையில் இருந்தால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் லேண்டரை கண்டுபிடித்தும், அதனால் எந்த பயனும் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory