» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமலாக்கப்பிரிவு வழக்கு: ப.சிதம்பரத்தை 26‍ம் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!!

சனி 24, ஆகஸ்ட் 2019 10:56:37 AM (IST)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 26-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க் கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதற்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் இந்த வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். சி.பி.ஐ. தனிநீதிமன்றம்  ப.சிதம்பரத்தை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வாதாடுகையில், "மேல்முறையீட்டு மனுவை விசாரிக்குமாறு கோருவதற்கு அரசியல் சட்டப்பிரிவு 21-ன் கீழ் மனுதாரருக்கு உரிமை உள்ளது. நாங்கள் கேட்பது எல்லாம் இந்த மனு விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான். தற்போது அவரை கைது செய்துள்ளதால் இந்த மனு செயலற்றதாகி விட்டது என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் மனுதாரரை (ப.சிதம்பரம்) சி.பி.ஐ. கைது செய்தது தவறானது. எனவே மனுதாரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அனைத்து முகாந்திரமும் உள்ளது” என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவையும், சி.பி.ஐ. காவலுக்கு உத்தரவிட்ட சி.பி.ஐ. தனிநீதிமன்றம்  உத்தரவுக்கு எதிரான மனுவையும் வருகிற 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரும் சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவின் மீது வாதத்தை தொடங்கிய கபில் சிபல், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சில பத்திகள், வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையாகும் என்று கூறினார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். பொய்யான தகவல்களை கோர்ட்டுக்கு தரவேண்டாம் என்று கூறியதோடு, இதுதான் உங்களிடம் உள்ள வாதமா? என்றும் கேள்வி எழுப்பினார்.அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, "உயர் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு முன்ஜாமீனை மறுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுனில் கவுர், பொருளாதார குற்றங்களில் முன்ஜாமீன் பெறும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதை கோர்ட்டு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இந்த ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் தருவதற்கு மறுத்த உயர் நீதிமன்றம் நீதிபதி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஏற்கனவே மனுதாரர் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தன்னுடைய தீர்ப்பில் எந்த தொடர்பும் இல்லாமல் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு பற்றியும் கூறியிருப்பது அவர் எதன் அடிப்படையில் இப்படி யோசித்து இருக்கிறார் என்பதை தெளிவு படுத்துகிறது என்றும் அப்போது அவர் கூறினார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த விவகாரத்தில் பணபரிமாற்றம் நடைபெற்றதை நிரூபிக்க மனுதாரருக்கு எதிரான எலெக்ட்ரானிக் ரீதியான தடயங்கள் எங்களிடம் உள்ளன. அந்த பணம் சட்டவிரோத பரிமாற்ற நடைமுறைகள் மூலம் மாற்றப்பட்டு உள்ளன. மனுதாரருக்கு வேண்டியவர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை வைத்து உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள 11 சொத்துகள் மற்றும் 17 வெளிநாட்டு வங்கி கணக்குகளின் விவரங்கள் எங்களிடம் உள்ளன. இவர்கள் அனைவரும் மனுதாரரின் ஆட்கள்தான் என்று எங்களால் நிரூபிக்க முடியும்” என்றார்.

அத்துடன், சிலரது பெயரில் போலி கம்பெனிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் ப.சிதம்பரத்தின் பேத்தி பெயரில் உயில் எழுதி வைத்து இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்து உள்ளது என்றும் அவர் கூறினார். அப்போது நீதிபதி ஆர்.பானுமதி குறுக்கிட்டு, "மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது உங்கள் வாதமாக இருக்க முடியாது இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு துஷார் மேத்தா பதில் அளிக்கையில், அவர் சரியாக பதில் அளிக்காமல் நழுவுகிறார் என்பது எங்கள் வாதம் என்றார். மேலும் ஏற்கனவே அவர் சி.பி.ஐ. காவலில் உள்ளதால் திங்கட்கிழமை (26-ஆம் தேதி) வரை அமலாக்கப்பிரிவு அவரை கைது செய்ய முடியாது என்றும், எனவே அவருக்கு தற்போதைக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க தேவை இல்லை என்றும் கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கைது செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் அமலாக்கப்பிரிவு வழக்குக்கு எதிராக முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரத்தின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory