» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமைச்சர்கள் யாரும் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

சனி 17, ஆகஸ்ட் 2019 4:15:51 PM (IST)

கர்நாடகாவில் அமைச்சர்கள் இடம்பெறாமலே, ஒரே அமைச்சரான முதலமைச்சரின் தலைமையில் இதுவரை 4 அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென கடந்த ஜூலை மாதம், ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியுற்றதை அடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஜூலை 26ம் தேதி எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், ஜூலை 31ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கால அவகாசம் அளித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 29ம் தேதி முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை உறுதி செய்தார் எடியூரப்பா.

எடியூரப்பா முதல்வராக பதவியேற்று மூன்று வாரங்கள் ஆகியும், தற்போது வரை கர்நாடக அமைச்சரவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது கர்நாடக அரசியல் சூழலில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் இடம்பெறாமலே, ஒரே அமைச்சரான முதலமைச்சரின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை கர்நாடகாவில் நான்கு அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கூட்டங்களில் முதல்வர், தலைமை செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால், கர்நாடக அமைச்சரவையில் யார், யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கவே கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல்வர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக அமைச்சரவை குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. அந்த சமயத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், எடியூரப்பா அமித் ஷாவை சந்தித்து பேச முடியவில்லை. முத்தலாக் மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், பாஜக தலைமை கர்நாடக அமைச்சரவை விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்து தற்போது ஒரு மாதம் முடியவடையவுள்ள நிலையில், அமைச்சரவையில் தனி ஒருவராக எடியூரப்பா கோலோச்சி வருகிறார். பாஜக தலைமையகம் எப்போது முடிவெடுக்கும் என்று நம்மை போலவே அவரும் காத்துக்கொண்டிருக்கிறார்.  இதையடுத்து, அடுத்த இரண்டு நாட்கள் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டு கர்நாடக அமைச்சரவை குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது காஷ்மீர் விவகாரம் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் கர்நாடக அமைச்சரவை குறித்து பாஜக தலைமையகம் ஒரு சில நாட்களில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 17, 2019 - 04:17:58 PM | Posted IP 162.1*****

ஆப்பை அசைத்த குரங்கின் வால் மரஇடுக்கில் மாட்டியது போல தினமும் முழித்து கொண்டே இருக்கிறார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes
Thoothukudi Business Directory