» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா மிகப்பெரிய அறிவியல் சக்தியாக உருவெடுக்க சாராபாய் முக்கிய காரணம்: பிரதமர் மோடி புகழாரம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 11:28:22 AM (IST)இந்தியா மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்க விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய் பங்காற்றினார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மத்திய விண்வெளி ஆய்வுத்துறை, இஸ்ரோ, அணுசக்தித் துறை ஆகியவை கூட்டாக நடத்திய இந்த நிகழ்ச்சியில், சாராபாய் குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரையின் விடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் மோடி பேசியதாவது: சாராபாயின் பிறந்த தின நூற்றாண்டை நாம் கொண்டாடும் இத்தருணம் விசேஷமானது. இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கவுள்ள வேளையில் இது வந்துள்ளது.அடுத்த மாதம் அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கும்போது, விக்ரம் சாராபாய்க்கு இந்தியாவின் 130 கோடி குடிமக்களின் புகழஞ்சலியாக அது இருக்கும். சமூகம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்தியா தயங்கக் கூடாது என்று அவர் கூறுவது வழக்கம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்ததில் அவர் முக்கியப் பங்காற்றினார். நாம் தற்போது விண்வெளித் தொழில்நுட்பத்தையும், அணுசக்தி தொழில்நுட்பத்தையும் சாமானிய மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்துகிறோம். இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கிய ஹோமி பாபாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை சாராபாய்தான் நிரப்பினார். கேரள மாநிலம் தும்பாவில் இருந்து அவர் 1960ஆம் ஆண்டுகளில் ஏவிய முதல் ராக்கெட்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்தது. அதுவே இந்தியா நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலங்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்டது.

நமது விண்வெளித் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கும் சாராபாய் புதிய பரிமாணத்தை அளித்தார். விண்வெளித் துறையில் நமது சாதனைகளைக் கண்டு இன்று உலகமே வியக்கிறது. அவர் பிரபலமான விஞ்ஞானி மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். விக்ரம் சாராபாயை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொண்டு, சமூகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று மோடி பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsCSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory