» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குமாரசாமி அரசு மீது நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு

புதன் 17, ஜூலை 2019 4:19:43 PM (IST)

கர்நாடகா சட்டசபையில் நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 16 பேர் கடந்த வாரம் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகர் தாமதப்படுத்துவதாக 15 எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த உத்தரவில், "ராஜிநாமா மற்றும் தகுதி நீக்கம் குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை உறுதிபடுத்துகிறோம். அதேசமயம், சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏ-க்களை கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், கொறடா உத்தரவுகள் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு பொருந்தாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனிடையே, குமாரசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்த தீர்ப்பு வெளியானதையடுத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உச்சநீதுிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். மதிக்கிறேன். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்படுவேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது உடனடியாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன். நிச்சயமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எனது முடிவுகள் இருக்காது. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக எனக்கு கூடுதல் பொறுப்பும், சுமையும் ஏற்பட்டுள்ளது.

இந்த வி‌ஷயத்தில் அரசியல் அமைப்பின் சட்டபிரிவுகள், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் லோக்பால் அமைப்பின் சட்ட பிரிவுகள் எனக்கு வழிகாட்டிகளாக உள்ளன. அவற்றின் அடிப்படையில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே நான் முடிவுகள் எடுப்பேன். எம்.எல்.ஏ.க்கள் மீது முடிவு எடுப்பதற்கு எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. எனக்கு அதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே எனது மனசாட்சிபடி செயல்படுவேன். என்றாலும் சட்டசபையில் நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory