» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நன்னடத்தை விதிகளின் கீழ் சசிகலாவை விடுவிக்க முடிவு: கர்நாடக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை?

செவ்வாய் 11, ஜூன் 2019 10:24:07 AM (IST)

நன்னடத்தை விதிகளின் கீழ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை விடுவிப்பது குறித்து, கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.  

1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சி நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும் அவரது  உறவினர்களும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 4 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017, பிப்ரவரி 14ம் தேதி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று அதிரடியாக தீர்ப்பு  கூறியது. இதனால், 3 பேரும், 2017, பிப்ரவரி 15ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சிறைவிதிகளை மீறியதாக அவர்மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 15ம் தேதியுடன் 2 ஆண்டுகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை, நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்வது குறித்து சிறைதுறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக அம்மாநில சிறைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பே அவர் நன்னடத்தை அடிப்படையில் வெளியே வர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளன. 

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து கர்நாடக அரசிற்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே வெளியே வர வாய்ப்புள்ளது’ என்றன. இதேபோல், 4 ஆண்டு சிறை தண்டனையின்படி சசிகலா 2021ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும். ஆனால், நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பாகவே விடுவிக்கலாம். அதன்படி, அவரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விடுதலை செய்யலாம். ஆனால், சசிகலாவை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் எனவும் சிறைத்துறை நிர்வாகம் அம்மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

மக்கள்Jun 13, 2019 - 09:50:17 AM | Posted IP 162.1*****

ஜெயலலிதாவின் சொத்தை ஆட்டை போட்ட மன்னார்குடி குரூப்ஸ் 20 ரூபாய் திருட்டு கட்சி தினகரன், வேலைக்காரியை நம்புவது நாட்டுக்கு சாபக்கேடு

தனி ஒருவன்Jun 11, 2019 - 05:26:43 PM | Posted IP 162.1*****

பணம் பத்தும் செய்யும்

BalajiJun 11, 2019 - 01:37:57 PM | Posted IP 162.1*****

நன்னடத்தை அப்படிகிறது ஜெயில்ல இருந்து ஷாப்பிங் போயிட்டு வராதா??

தமிழ்ச்செல்வன்Jun 11, 2019 - 12:03:31 PM | Posted IP 108.1*****

சாமானிய குடிமகனுக்கு இப்படி நடக்குமா? பணம் பாதாளம் வரை பாயுமாமே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory