» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் : டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி
வெள்ளி 19, மே 2017 8:55:44 AM (IST)
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி தனி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

டெல்லி போலீஸ் சார்பில் தனி நீதிமன்றம் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு கடந்த 11-ந்தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினகரன்-சுகேஷ் சந்திரசேகர் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் உள்ளதாகவும், இந்த குரல் மாதிரிகளின் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் அவற்றை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தின் தடயவியல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் பல்பீர் சிங் வாதாடுகையில், தினகரன் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குரல் மாதிரிகளை உறுதி செய்யும் வகையில் அதை அவரது குரலுடன் ஒப்பிட்டு சோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் போலீசாரிடம் உள்ள குரல் மாதிரி பதிவு பிரதியை தினகரன் தரப்புக்கு வழங்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். "இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தினகரன் தரப்பு கூறுவது போல குரல் பதிவுகளை தினகரன் தரப்புக்கு வழங்க முடியாது. வழங்கினால் அதனை ஒப்பிட்டு பார்த்து அவர் மாற்றி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றும் அப்போது அவர் கூறினார்.
உடனே தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் நேகி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், குரல் மாதிரி சோதனைகளை சுப்ரீம் கோர்ட்டே பல வழக்குகளில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அனுமதிக்கவில்லை என்றும், சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றும் கூறினார். மேலும் தற்போதைய நிலையில் டெல்லி போலீஸ் வசம் இருக்கும் குரல் பதிவுகள் தங்களுக்கு தேவை என்பதை இப்போது வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள உரையாடல் பதிவுடன் தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை ஒப்பிட்டு சோதனை நடத்துவதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்து உத்தரவிட்டார். தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை பதிவு செய்ய விசாரணை அதிகாரி உரிய நடவடிக்கை தொடங்கலாம் என்றும், அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி குரலை பதிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் தினகரனும், மல்லிகார்ஜூனும் ஜாமீன் கோரி தாக்கல் செய்து இருந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அந்த மனுக்களின் மீதான விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் லலித் குமார் கேஷா என்ற பாபுபாய் என்பவரை நேற்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, பாபுபாய் டெல்லியைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு என்றும், இவர் மூலமாகத்தான் சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா பணம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது என்றும், எனவே இவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிவேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாபுபாயை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசுக்கு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாபுபாயை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டார். அப்போது எடுத்த விடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
இதற்கிடையே, திகார் சிறையில் இருக்கும் தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்) ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியும் சென்று இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு
சனி 21, ஏப்ரல் 2018 7:57:18 PM (IST)

பணமதிப்பிழப்புக்குப் பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவல்
சனி 21, ஏப்ரல் 2018 5:34:14 PM (IST)

தமிழகத்தை போல ஆந்திராவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது: சந்திரபாபு நாயுடு
சனி 21, ஏப்ரல் 2018 5:23:00 PM (IST)

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சனி 21, ஏப்ரல் 2018 4:33:59 PM (IST)

இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து வெளிநாட்டில் பேசுவது ஏன்? மோடி மீது சிவசேனா பாய்ச்சல்!!
சனி 21, ஏப்ரல் 2018 3:31:56 PM (IST)

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
சனி 21, ஏப்ரல் 2018 2:05:17 PM (IST)
